பனிமனிதன் அல்லது குரங்கு மனிதன் – Bigfoot

என்னது குரங்கு மனிதனா ? அப்படி ஒரு உயிரினம் உண்டா ?

ஆமாம்.. குரங்கு மனிதன் என்கிற பிக் ஃபூட் என்றொரு உயிரினம் பனிமலை பிரதேசங்களில் உள்ள காடுகளில் வாழ்கிறது. இதைப்பற்றி வர்ணனைகளை கேட்டால் எதோ ஹாலிவுட் படங்களில் வரும் fictional character என்று தோன்றும். அப்படிதான் ஆய்வாளர்களும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் உண்மை அதுவல்ல... பிக் ஃபூட் எனப்படும் ராட்சத உருவம்கொண்ட குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட விலங்கு ஒன்று பூமியில் வசிக்கிறது.

"பிக் ஃபூட் வாழ்கிறது என்கிறீர்கள் ! அதற்கென்ன ஆதாரம் ?"

ஆதாரம் உண்டு, நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் மற்றும் அவர்கள் எடுத்த ஏராளமான புகைப்படங்கள்! இவ்வளவு ஏன் அந்த மிருகத்தால் தாக்கப்பட்டவர்கள் கூட உண்டு ! 

முதன்முதலாக கேமராவில் சிக்கிய குரங்கு மனிதனின் படம் !

“அதுமட்டும்தானா..! ஒரு மனிதனை கூட பிடிக்க முடியவில்லையா ?”

பனிமனிதனை நம்மைபோன்ற சாதாரண மனிதர்களால் பிடித்துவிட முடியாது. காரணம் அதீத கோபமும், கூச்ச சுபாவமும் உள்ளவன் அவன்.. மனிதர்களை கண்டாலே ஓடி மறைந்துவிடுவான். அவன் வேகம் நம்மால் கற்பனைகூட பண்ண முடியாது... புகைப்படங்களில் அந்த விலங்குகள் சரியாக focus கூட ஆகியிருக்காது. காரணம் அவன் ஓரிடத்தில் நிலையாக நிற்க மாட்டான் என்பதும் அவனுடைய அதீத வேகமும்தான்.

வெறும் போட்டோக்களையும், சாட்சியங்களையும் வைத்து எப்படி நம்புவது ! செல்லாது செல்லாது என நீங்கள் நினைக்க கூடும். உண்மைதான்.. இதைத்தாண்டி நம்மிடம் ஒரு பெரிய ஆதாரம் உள்ளது ( உண்மையில் “பெரிய” ஆதாரம்தான் ! ) அது அவனுடைய பாதச்சுவடுகள் (footprint ) !

குரங்கு மனிதனின் பாதச்சுவடு ! 

பாதச்சுவடு என்றால் ஏனோ தானோ என்றில்லை, மனிதனின் நான்கு பாதச்சுவடுகளை அதற்குள் வைக்கலாம் ! ஒப்பீட்டளவில் மிகப்பெரியது ! இருந்த அந்த காலடித்தடத்தை வைத்துதான் ஆய்வாளர்கள் குரங்கு மனிதனுக்கு BIGFOOT என பெயரிட்டனர். ( மூன்று முறை அவன் காதில் சொன்னார்களா என்று தெரியவில்லை )

சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் கூட குரங்கு மனிதன் நடமாடுகிறான், இரவானால் டெல்லி வீதிகளில் அலைகிறான் என்றெல்லாம் பீதியை கிளப்பினார்கள். நாட்கணக்கில் டெல்லி மக்கள் தூக்கம் தொலைத்துவிட்டு சாலைகளில் திரிந்தார்கள்..  நினைவிருக்கிறதா ?

இதுவரை ஒரு பிக் ஃபூட்டை கூட மனிதனால் பிடிக்க முடியாமல் போகக்காரணம், அவர்கள் வசிக்கும் இடம்தான்..! நம்மால் எளிதில் அணுகிவிட முடியாத அடர்ந்த காடுகளுக்குள்தான் அவர்கள் வசிக்கிறார்கள். இதுவரை இந்த விலங்குகளை பார்த்தவர்கள் தனியாகத்தான் பார்த்திருக்கிறார்கள். குழுவாக பார்த்ததில்லை.

காரணம், இவர்கள் ஒரு குழுவாக செயல்படமாட்டார்கள். குழுவாக செயல்படும்போது, கிடைக்கும் இரைக்காக எல்லோரும் அடித்துக்கொள்ள வேண்டும். தனித்தனியாக இரைதேடி அலைந்தால். கிடைப்பது முழுவதும் அவர்களுக்கே சொந்தம். தவிர நிறைய இடத்தை கவர் பண்ணலாம். அதனால் இவர்கள் குழுவாக சேர்வதே இல்லை...

இரவு நேரங்களில், ஆராய்ச்சிக்காக நம்மாட்கள் தங்கியிருக்கும் டென்ட்களுக்குள் புகுந்து.. உணவுகளை திருடிச்செல்கிரார்கள் என்கிற குற்றச்சாட்டும் அவர்கள் மீது உண்டு.

பிக் ஃபூட் விலங்கு அடிக்கடி வந்துபோகும் இடம் என கருதப்படும் ஒரு இடத்தில் உள்ள எச்சரிக்கை பலகை !

பிக் ஃபூட் எப்படித்தான் இருக்கும்...

குறைந்த பட்ச உயரம் 8 அடிகள் அதிகபட்ச உயரம் 10 ல் இருந்து 11 அடிகள் வரை, அகலம் ஆஜானுபாகுவான மனிதனை போல மூன்று மடங்கு. எடை கிட்டத்தட்ட 1000 கிலோக்கள் ! இந்த அளவீடுகளை வைத்து அதன் கை, கால்கள் எவ்வளவு பெரிதாக இருக்கும் என கற்பனை செய்துக் கொள்ளுங்கள் !

பிக் ஃபூட்டின் அளவை தெரிந்துக்கொள்ள ஏதுவான மாதிரிப்படம் !

நேரில் பார்த்த C Brown என்பவர் சொன்னதை அவர் கண்களிலேயே பார்ப்போம் !

காடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் காட்டுப்பகுதியில் ஒரு வீடு வாங்க வேண்டி, ரியல் எஸ்டேட்காரர்கள் கூறிய சில வீடுகளை பார்ப்போம் என என் மனைவவி மற்றும் குழந்தைகளுடன் கிளம்பினேன். முதல் இரண்டு வீடுகள் பார்த்தும் மனதுக்கு பிடிக்காமல், அடுத்து அவர்கள் சொன்ன வீட்டை பார்க்க ஆலரவம்ற அடர்ந்த காட்டுக்குள் பயணித்தோம்.

நீண்ட பயணத்துக்கு பிறகு இலக்கை அடைந்து வண்டியை நிறுத்த, வண்டி சத்தத்தை கேட்டு சலனப்பட்ட எதோ ஒன்று வீட்டின் மாடியில் உள்ள அரை ஜன்னல் கதவுகளை உடைக்கிறது... உஷாரான நான் வாயில் விரல் வைத்து ‘உஷ்ஷ்ஷ்’ என்றேன்.. உடைந்த ஜன்னல் வழியாக ஒரு திடகாத்திரமான கை வெளியே வருகிறது. கை முழுக்க அடர்த்தியான ரோமங்கள். குரங்காக இருக்க கூடும் என நினைத்து எச்சரிக்கையுடன் வேடிக்கை பார்த்தோம். பின் மெல்ல கால்கள், உடல், தலை என சகவாசமாக வெளியேறிய உருவத்தை பார்த்து உடல் சில்லிட்டது. அது குரங்கல்ல மனிதன் !

அந்த உருவம் மேலிருந்து கீழே குதித்த அதிர்வை நாங்களும் உணர்ந்தோம். பயத்தில் என் கைகளை பற்றிய என் மனைவி “இங்கிருந்து போய்விடலாம்” என அலற ஆரம்பித்தாள். கீழே குதித்த உருவம் தீர்க்கமாக எங்களை பார்த்துவிட்டு படு கோரமாக பெருங்குரல் எடுத்து கத்தியது.. அதன்பிறகு நாங்கள் அங்கு நிற்காமல் கிளம்பிவிட்டோம்.

“இப்போதும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது, அதன் கண்கள் பெரிதாகவும் தீர்க்கமாகவும் இருந்தது, உடல் முழுவதும் அடர்த்தியான செந்நிற ரோமங்கள் சூழ்ந்திருந்தது “ இவ்வாறாக அவர் கூறுகிறார்.  

இருக்கிறான் என்பதற்கு ஆதாரமாக இப்படி சில நேரடி சாட்சிகளும், போட்டோகிராப்சும், காலடித்தடங்களும் கிடைத்தபிறகு, ஆராய்ச்சியாளர்கள் அவனுடைய பூர்வீகத்தை ஆராய ஆரம்பித்துள்ளனர்.. அவரவர் அவரவர் பிரியத்திற்கு சில தியரிகளை உருவாக்க ! பனிமனிதனின் வரலாறும் பரிணாமும் இதுதான் என தற்போது நம்மிடம் ஏகப்பட்ட தியரிகள் உள்ளது.

இன்னமும் உறுதியாக இதுதான், இப்படிதான் என்று சொல்ல நம்மிடம் எதுவும் கைவசம் இல்லை. ஆய்வாளர்கள் தொடர்ந்து காடுகளில் சுற்றிக்கொண்டிருகிறார்கள். தானியங்கி காமிராக்கள் அவர்கள் வருகைக்காக 24 மணிநேரமும் சுழன்றுக்கொண்டிருக்கிறது. அவனோ “வாம்மா மின்னல்” என்பது போல சடக்கென தோன்றி படக்கென மறைந்துப்போய் விளையாட்டு காட்டுகிறான். என்றாவது ஒருநாள் அகப்படுவான்...

பார்ப்போம்...