நாஸ்கா லைன்ஸ் ( The Nazca Lines)

நாம் ஒரு ஓவியம் வரைகிறோம்... அந்த ஓவியத்தின் அளவு சராசரியாக எவ்வளவு இருக்கும் ? ஒரு தனி மனிதன் வரைந்தால் அவனால் அதிகபட்சம் ஒரு ஆறடி அளவுள்ள ஓவியத்தை வரைய முடியும். அதை செய்து முடிக்க அதற்கான மூலப்பொருட்கள், மாடல் எல்லாம் தேவை...

எந்த மூலப்பொருட்களும் இல்லாமல் சமதளமான இடமும் இல்லாமல், மேடு பள்ளங்களை செதுக்கி கற்களை உடைத்து மெஷின் கட் செய்தார்போல மிகச்சரியான அளவுகளுடன் சில ஓவியங்கள் கிலோமீட்டர்கள் கணக்கில் சரியான அளவுகளுடன் காணக்கிடைத்தால்... அதுதான் நாஸ்கா லைன்ஸ் !

இங்கு மனிதனை தாண்டி பெரிய சக்திகள் எதுவும் இல்லை, மனித அறிவுக்கு அப்பாற்ப்பட்டு எதுவும் இல்லை, விஞ்ஞானத்தால் விடைகாண முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை ! என்றெல்லாம்  நாம் மார்தட்டிக்கொண்டிருக்கும் வேளையில், நம்மால் என்றுமே கண்டுபிடிக்க முடியாத சில மர்மங்களை தனக்குள் வைத்துக்கொண்டு, நம்மை கண்டு நக்கலாக சிரிக்கிறது இந்த பூமிப்பந்து...  அதில் ஒன்றுதான் நாஸ்கா லைன்ஸ் ! 

அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள, ஒரு  வறண்ட பாலைவனத்தில் முதல்முதலாக அந்த கோடுகளை பார்த்தவர்கள் அதை பெரிய விஷயமாக கருதவில்லை !  சில இடங்களில் நேர்த்தியாகவும், சில இடங்களில் வளைந்து நெளிந்தும் போகும் கோடுகள் என்ன சொல்ல நினைக்கிறது ? என தெரியாமல் கடந்துச் சென்றார்கள்.

படத்தில் நாஸ்கா லைன்களின் அளவை ஒப்பிட்டு பாருங்கள் 

எதற்காக இந்த கோடுகள் வரையப்பட்டிருக்கிறது, ஏன் எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது ? என மண்டையை பிய்த்துக்கொண்ட பெருவை சேர்ந்த ஆர்க்கியாலஜிஸ்ட் டோரிபியோ மேஜியா க்செஸ்பீ ( Toribio Mejia Xesspe) என்பவர் கிபி 1927 ல், “இதில் என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்கறேன்” என களத்தில் இறங்கினார்.

சற்று உயரமான மலைப்பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து கோடுகளை உற்றுப்பார்த்தார், நேராக செல்லும் கோடுகள் சில இடங்களில் வளைந்து நெளிந்து போய் மீண்டும் நேராக, ‘ என்னடா இது ?’ என குழப்பத்தில் ஆழ்ந்தார். ஆனால் ! அந்த இடத்தில் என்னவோ உள்ளது என்பதை மட்டும் கண்டுகொண்டார்.

நாஸ்கா லைன்ஸ் வரைபடம் 

3 ஆண்டுகள் ஓடிப்போனது, 1930 வாக்கில், அந்த பக்கமாக வந்த பயணிகள் விமானத்தில் இருந்த ப்ரொபசர் பால் கோசோக் ( Paul Kosok) என்பவர். எதேச்சையாக இந்த கோடுகளை பார்க்க, அவர் இதயத்துடிப்பு எகிறியது... கண்களை கூர்மையாக்கி கோடுகளின் இணைப்பை பார்த்தவர் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார். ஆமாம்.. அத்தனையும் மெகா சைஸ் ஓவியங்கள் !

அதன் பிறகு ப்ரொபசர் பால் கோசோக் தன் வாழ்வில் பெரும்பகுதியை இந்த ஆராய்ச்சிக்காக ஒதுக்கினார். பலமுறை விமானத்தில் பறந்து பல கோணங்களில் புகைப்படங்களை எடுத்து பார்த்ததில், கிட்டத்தட்ட 800 வெறும் கோடுகளும், 300 ஜியோமேட்டரிக் ஷேப்களும், 70 வகையான மிருகங்கள், செடிகொடிகளின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் சில கோடுகளின் நீளம் 30 மைல்கல் !

சராசரியாக ஒரு கோட்டின் அகலம் ஒரு மீட்டர் இருந்ததாம், எங்குமே அளவுகள் பிசகாமல் கோடுகள் மிக சாரியாக துல்லியமாக இழுக்கப்பட்டிருக்கிறது.

சமதளங்கள் கூட இல்லாமல், மேடுபள்ளங்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியம் 

ஏன் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது ? குரங்கு படம், டால்பின் படம், சிலந்தி பூச்சின் படம், பறவைகள் படம் இதெல்லாம் என்ன சொல்ல வருகிறது ? என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாமலேயே அவர் இறந்து போனார்.

ப்ரொபசர் பால் கோசோக் குக்கு பிறகு, அவர் மாணவி ஒருவர் இந்த கோடுகளை ஆராய ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அவர் வாழ்வில் பாதியை இதற்காக செலவிட்டார். அவராலும் ஏன் இந்த கோடுகள் வரையப்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

நாஸ்கா மக்களால் அந்த கோடுகள் வரையப்பட்டிருக்கும் என்று சொல்லிவிட்டு, கேசை க்ளோஸ் பண்ணிவிடலாம்தான் ! ஆனால் அது உண்மையா ? என்பதில்தான் அத்தனை மார்மங்களும் அடங்கியுள்ளது.

நாயின் படம்  ( கால்களுக்கு இடையில் குறுக்கிடுவது சாலை )

இந்த ஓவியங்கள் தோராயமாக கிமு 200 ல் இருந்து கிபி 400 க்குள் வரையப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

ஒரு தரப்பினர்.. நாஸ்கா மக்கள் ஆதிவாசிகள். அவர்களுக்கு இந்த அளவுக்கு ஜியோமேட்டரி அறிவு இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.  இன்னொரு தரப்பு இல்லவே இல்லை ஆதிவாசிகளால்தான் இது வரையப்பட்டது என அடித்துச்சொல்கிறார்கள் ! அதற்கு அவர்கள் சில உதாரணங்களை காட்டுகிறார்கள்.

பறவை 

மலைமீதுள்ள ஓவியம் 

இந்தியாவில் உள்ள கோவில் கோபுரங்களையும், எகிப்தில் உள்ள பிரமீடுகளையும் மேற்கோள் காட்டி,  இதெல்லாம் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு கட்டப்பட்டதுதானே ? இதையெல்லாம் அவர்கள் கட்டினார்கள் என நம்பும்போது ! நாஸ்கா மக்கள் இந்த ஓவியங்களை வரைந்தார்கள் என்பதை மட்டும் ஏன் நம்ப முடியாது ? என்கிறார்கள் ! இந்தியர்கள் ஒற்றுமையுடன் கோவில்களை கட்டியது போலத்தான் இங்கும் ஒரு டீம் வொர்க்காக இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள் என அவர்கள் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள்.

எகிப்தில் உள்ள பிரமிட் 

சரியான வாதம்தான் ! ஆனால், இந்தியர்கள் கோவில்களை கட்டியது வழிபாட்டுக்காக ! இந்த ஓவியங்கள் எதற்காக ? என்கிற கேள்வியை முன்வைத்தால் அதற்கும் அவர்கள் தரப்பில் ஒரு பதிலை சொல்கிறார்கள். நாஸ்கா மக்களுக்கு கடவுள் நம்பிக்கையும் மூட நம்பிக்கைகளும் அதிகமாம்.

மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் 

ஆகாயத்தில் இருந்து தங்களை கடவுள் பார்க்கிறார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாம். கண்காணிக்கும் அவர்களுடைய கடவுளை வரவேற்க, அல்லது அவர்களை திருப்திப்படுத்த இந்த ஓவியங்களை வரைந்ததாக சொல்கிறார்கள்.

எல்லாம் சரிதான் ! எப்படி இவ்வளவு துல்லியமாக அவர்களால் வரைய முடித்து ? எப்படி சாத்தியம் ? சில இடங்களில் சின்ன சின்ன குன்றுகள் மலைகள் மீதும் இந்த ஓவியக்கொடுகள் நேர்கோட்டில் செல்கிறது ! அதெப்படி ? ஏனெனில்,  சம வெளியில் இருந்து நம்மால் அந்த ஓவியத்தை பார்க்கவே முடியாது, ஆகாயத்தில் பறந்துதான் பார்க்க முடியும் ! இந்த அளவுக்கு பர்பெக்ஷன் எப்படி சாத்தியம் ? எனக்  கேட்டால்.. “ அது அப்படிதான் “ என்று நழுவுகிறார்கள்.

இதைப்பற்றி இன்னொரு கருத்தும் உண்டு, அது வேற்றுக்கிரக வாசிகள்தான் இதை வரைந்திருக்கிறார்கள் என்பது! அவர்களிடம் அப்படி ஒரு தொழில் நுட்பம் இருந்திருக்கலாம் ! லேசர் கருவி போன்ற எதையோக்கொண்டு அந்த பகுதியில் படங்களை வரைந்திருக்கலாம் என்கிறார்கள் ! இது ஒருபுறமிருக்க...

வேற்றுக்கிரக வாசிகளின் ரன்வேவாக இது பயன்பட்டிருக்கலாம் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். அவர்கள் வாகனத்தை பூமியில் இறக்க அவர்களுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடம் தேவை ! அதற்காக அவர்கள் இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

அவர்கள் பூமியில் கண்ட சில உயிரினங்கள், வடிவங்களை அடையாளத்துக்காக வரைந்து வைத்திருக்கலாம் என்றும் ஒரு வாதம் உண்டு.

நாஸ்கா கோடுகளை சார்ந்து வேறு சில கட்டுக்கதைகளும் உண்டு. ஆனால் இந்த வேற்றுக்கிரக வாசிகளின் ரன்வேதான் இது என்பதை மட்டும் நம்மால் புறம் தள்ள முடியவில்லை.