மனிதன்...

அவன் வரலாறு என்ன?

எப்படி தோன்றினான்?

முதலில் என்னவாக இருந்தான்?

அவன் எப்படி உலகில் உள்ள மற்ற உயிரினங்களை எல்லாம் அவன் அதிகாரத்தின் கீழ் அடக்கினான்?

இதை எழுதுவதும் அவன்தான்...

இதை படித்ததும் அவன்தான்....

இதை தேடியதும் அவன்தான்....

இதை கண்டுபிடித்ததும் அவன்தான்...

 

அவன்.. அதுதான் நாம். நம்மை நம் வேர்களை தேடிக்கண்டுபிடிப்போமா ?

வாருங்கள் கால இயந்திரத்தில் ஏறி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் செல்வோம்.

பெருவெடிப்புக்கு பின், நாம் வாழும் பூமி ஒருமாதிரி கோளமாக உருவானது. அந்த சமயத்தில் உலகெங்கும் கிலோமீட்டர் கணக்கில் ராட்சத சுனாமி அலைகள் சுழன்று அடிக்க,  ஆக்சிஜன் என்ற ஒன்றே இல்லாத காலகட்டமது. பெருவெடிப்பின் மிச்சமாக பூமி முழுவதும் உஷ்ணம் சூழ்ந்திருக்க , கொதிக்கும் தோசைக்கல்லில் தெளித்த தண்ணீரை போல, கடலலைகள் எழுந்து பூமிப்பந்தை நனைத்து பூமிப்பரப்பின் சூட்டை கொஞ்சம் கொஞ்சமாக தணித்துக்கொண்டிருந்தது ! 

அந்த சமயத்தில், இயற்கையின் திருவிளையாடலால் ஒரு பெருமின்னல் அடிக்க, அதன் விளைவாக கடலில் மின்சக்தி பாய்ந்தது, அந்த மின்சக்தியால் கடலின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம், கடலுக்குள்  உயிரினம் தோன்ற ஏதுவான சூழலை உருவாக்கியது. உயிர்களின் அத்தியாயம் துவங்கியது... ஆம்! ஒரு செல் உயிரினம் தோன்றியது. அது மெல்ல மெல்ல பரிணமித்து தன்னுயிரை நீட்டித்துக்கொண்டது. பெண், தனக்குதானே கருவுற்று மீண்டும் ஒரு பெண்ணை பெற்று இப்படியாக இனம் வளர்ந்தது.

ஒரு பெண்ணிலிருந்து பிரதி எடுக்கும் தவறுகளால் (Gene Mutation) இன்னொரு உயிரினம் உருவாகி அது ஆண் ஆனது. அந்த ஆண் பெண்ணுடன் இணைந்து வம்சத்தை விரிவாக்க. ஒற்றை செல் உயிரினமாக ஆரம்பித்த பயணம் மெல்ல பரிணமித்து அடுத்த கட்டத்தில் மீனாகி, நீரில் இருந்து நழுவி மேலேறி , பின் குரங்காகி, அதிலிருந்து ஆரம்பகட்ட மனிதனான ஹோமோ எரக்டஸ் ஆகி, ஹோமோ சேபியன்ஸ் ஆகி, ஆகி, பல ஆகிகளுக்கு பிறகு தற்போதைய நாகரிக மனிதனாகி இதை படித்துக்கொண்டிருக்கிறோம்.

ஓகே.. இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்ப்போமா?

மனித முகம். அதுதான் உலகிலேயே தனித்துவமானது, ஒருவன் முகம் போல இன்னொருவனுக்கு இருக்காது. அதுதான், நீ யார்? நான் யார்? அவன் யார்? என்றெல்லாம் முடிவுசெய்யும் ஒரு விஷயம். ஒவ்வொருவருக்கும் குணாதிசயங்கள் மாறும், மனித பரிணாமத்தில் (ஹோமோ சேபியன்ஸ் ஆன பிறகு) இன்றுவரை மாறாமல் இருப்பது கண்களும் மூக்கும்தான்.

முதலில் கண்கள் நமக்கு தலையின் இரண்டு புரமும்தான் இருந்ததாம், பின் மெல்ல மெல்ல நடுவில் வந்ததாக சொல்கிறார்கள். மீனைப்போல! (நம்மைபோன்ற நார்மலான உடம்பில் மீன் தலையை பொருத்திப்பார்த்து கற்பனை செய்துக்கொள்ளுங்கள்)

மனிதனின் முதல் பரிணாம வளர்ச்சி ஏற்பட்ட இடம் ஆப்பிரிக்க காடுகளில்தான். தோராயமாக  400,000 த்தில் இருந்து 500,000 வருடங்களுக்கு முன் குரங்கில் இருந்து மெல்ல பிரிந்து  “இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுப்பா” என தனிக்குழுவான குரங்கு மனிதன்தான் தொன்மையான மனித இனத்தின் முதல் ஆதி தாத்தா!

பரிணாம வளர்ச்சி என்பது ஜீ பூம்பா என ஓவர்நைட்டில் நிகழ்ந்துவிடாது, ஒவ்வொரு மாறுதலுக்கும் சில ஆயிரம் வருடங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு தவறுகளையும் சரிசெய்துகொண்டு, மனிதனின் இன நீட்டிப்புக்கும் உயிர் நீட்டிப்புக்கும் எதுவாக உள்ளதை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கடத்தி, தேவையில்லாதவைகளை கழித்துக்கட்டி, ஒவ்வொரு கட்டமாக மனிதனை இயற்கை செதுக்கியது.

இந்த சமயத்தில்தான் இரண்டாம் கட்ட பரிணாம வளர்ச்சியாக நியாண்டர்தால் மனிதர்கள் தோன்றினார்கள், முதலில் நெருப்பை கண்டுபிடித்து அதை தன்வசப்படுத்தியவர்கள் அவர்கள்தான். உருவம் பெரிதாக இருந்தாலும் புத்திசாலித்தனம் இல்லாதவர்களாகவும், தற்காத்துக்கொள்ள தெரியாமலும் இருந்ததால், காலப்போக்கில் அந்த இனம் அழிந்துபோனது. 

நியாண்டர்தால் மனிதர்கள் வந்து சில ஆயிரம் வருடங்கள் கழித்து வந்த ஹோமோ சேபியன்ஸ் என்று சொல்லப்படும் தற்கால மனிதர்கள்  உயிர் வாழ்தலில் வென்று, மிச்சம் மீதி இருந்த நியாண்டர்தால் மனிதர்களையும் கொன்றொழித்தார்கள் என்கிறார்கள்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி

மீனிலிருந்து மனிதனாக பரிணமித்ததை காட்டும் ஓவியம் 

550 இலட்சம் வருடங்கள் முன் – கடலில் இருந்து நழுவி வெளியேறினோம்.

150  இலட்சம் வருடங்கள் முன் கிப்பன் குரங்கு இனத்தில் இருந்து மனிதக்குரங்கு என்றழைக்கப்படும் apes ஆக மாறினோம்.

50 இலட்சம் வருடங்களுக்கு முன் “ப்ரோட்டோ ஹியூமன்” என்று சொல்லப்படும் (Ardipithecus) சிம்பன்சிக்கும் கொரில்லாவுக்கும் இடையே உள்ள ஒரு உயிராக பரிணமித்தோம்

40 இலட்சம் வருடங்கள் முன், சிம்பன்சி குரங்கைவிட பெரிய மூளையுடன் புத்திசாலித்தனத்துடன் கூடிய “Australopithecines “ ஆக மாறினோம்

28 இலட்சம் வருடங்கள் முன், முதல் ஹோமோ இனமான LD 350-1 என்கிற குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிராக பரிணமித்தோம்.

27 இலட்சம் வருடங்களுக்கு முன், உணவை சாப்பிடுவதற்கு ஏதுவாக, பெரிய தாடையுடன் கூடிய குரங்கு மனிதனாக பரிணமித்தோம்

23 இலட்சம் வருடங்கள் முன், ஹோமோ ஹெபாலிஸ் என அடுத்த கட்ட உயிரினமாகி ஆப்பிரிக்க காடுகளில் அலைந்தோம்.

16 இலட்சம் வருடங்கள் முன், முதன்முதலாக விலங்குகளை வேட்டையாட கற்களை கூர்ப்படுத்தி ஆயுதமாக்க ஆரம்பித்தோம்.

8 இலட்சம் வருடங்களுக்கு முன், நெருப்பை கண்டு பயப்படாமல் அதை கட்டுப்படுத்தும் வித்தையை அறிந்தோம், அதன்பின் மனிதனும் மூளையும் யோசிக்கும் திறனும் அதிகமானது.

4 இலட்சம் வருடங்கள் முன்புதான் நியாண்டர்தால் மனிதர்கள் தோன்றினார்கள், இவர்கள்தான்  கட்டுபடுத்த கற்றுக்கொண்ட நெருப்பை, முதன்முதலாக உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்தவர்கள் ! ஐரோப்பியாவிலும் ஆசியாவிலும் பரவி வசித்தனர்.

2 இலட்சம் வருடங்கள் முன், கடைசியாக, ஹோமோ சேபியன்ஸ் என்றழைக்கப்படும் நாம் ஆப்பிரிக்க காடுகளில் தோன்றினோம்

அங்கிருந்து ஆரம்பித்த பயணம்தான் ! இன்று இதை எழுதும் நான், படிக்கும் நீங்கள் வரை வளர்ந்து நிற்கிறோம்.

போகிற போக்கில் இன்னொரு சுவாரஸ்யத்தையும் பார்ப்போமா ?

டைனோசராய்ட் எனப்படும் டினோசர் டூ  மனிதன் மாடல் !

மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் மீனில் இருந்துதான் தோன்றியது.  ஒருவேளை நாம் குரங்கில் இருந்து பரினமிக்காமல் இருந்திருந்தால் ? இப்படி ஒரு கேள்வியோடு விஞ்ஞானிகள் மண்டையை பிய்த்துக்கொள்ள, அவர்களுக்கு எளிதாக ஒரு விடை கிடைத்தது.

அது, குரங்கிலிருந்து பிறக்கவில்லை என்றால்! டைனோசர்கள் இனத்தில் இருந்து பிறந்திருப்போமாம் ! அந்த டைனோசர் பெயர் stenonychosaurus equallus சாரி பாஸ் தமிழ்ல சொல்ல முடியல... அந்த டைநோசரில் இருந்து மனிதன் வந்திருந்தால் எப்படி இருந்திருப்பான் என்பதை யோசித்து மாடலாக்கி ம்யூசியத்தில் வைத்திருக்கிறார்கள்.

மேலும் சில கற்பனை மாடல்கள் ! 

இப்படி ஒரு உருவத்தோடு ஜீன்ஸ் டீ ஷர்ட் ஆட்களையும், பட்டுப்புடவையில் தலைநிறைய பூ வைத்த பெண்களையும் நினைத்துப்பாருங்களேன்....! சங்கட்டமா இல்ல? நல்லவேலை, குரங்கில் இருந்து பிறந்தோம்!