14 அங்குல மனிதர்கள் !

"14 அங்குலத்தில் மனிதர்களா? எப்படி சாத்தியம்? ரீல் விடாதிங்க பாசு, நல்லா பாருங்க, குறைபிரசவமா இருக்கப்போகுது ! " என்றெல்லாம் உங்களுக்கு தோன்றலாம்... விளக்குகிறேன், விளங்கிக்கொள்வோம்!

கி.பி 1934, அமெரிக்காவில் உள்ள வயோமிங் மலைகளில் தங்கத்தை தேடி ஒரு குழு சென்றது. அவர்கள் தேடிச்சென்றது தங்கம்தான்.. ஆனால் கிடைத்தது அதைவிட பெரிய பொக்கிஷம்! அதுதான் நம்ம கட்டுரையின் ஹீரோவான 14 அங்குல மனிதர்களின் பதப்படுத்தப்பட்ட பிணம்!

 

வயோமிங் மலைத்தொடர் !

தங்கத்துக்காக ஒரு இடத்தை தேர்வுசெய்து அதை தோண்ட ஆரம்பித்தபோதுதான் அங்கிருந்த சின்ன நுழைவாயில் அவர்கள் கண்களுக்கு தெரிந்தது. "ஆள்நடமாட்டமே இல்லாத பகுதியில் இதுபோன்ற ஒரு இடமா!" என ஆச்சர்யம் மேலிட, புதையல் ஏதோ உள்ளிருக்கிறது என்றெண்ணி தொடந்து தோண்டி முன்னேறினர். உள்ளே ஒரு அறை, அதைத்தாண்டி இன்னொரு சிறிய அறை, அறை என்றால் 10X10 அறை அல்ல! குட்டியூண்டு அறை.. நம்மாள் உடலை உள்நுழைக்க முடியும் அவ்வளவுதான்...  சிரமப்பட்டு வளைந்து நெளிந்து உள்நுழைந்தவர்கள் கண்களில் பட்டது, பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடந்த 14 அங்குல உடல்!

14 அங்குல மனிதனை கண்டெடுத்த இடத்தின் நுழைவாயில்.

ஆச்சர்யம் மேலிட அந்த உடலை அக்குழுவினர் கைப்பற்றினர். விஷயம் விஷம் போல பரவ! ஆய்வாளர்கள் அவ்விடத்துக்கு ஓடிவந்தனர்.

"எதோ குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடலாக இருக்ககூடும்" என்றுதான் முதலில் நினைத்தனர். அப்படியென்றால், குறைபிரசவத்தில் பிறந்த அக்குழந்தையை ஏன் பதப்படுத்த வேண்டும்? என்கிற கேள்வி எழுந்தது! குறைபிரசவம் என்றால் ஏதாவது ஒன்று இயல்பை விட பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கும்! ஆனால் இங்கு கண்டெடுக்கப்பட்ட உடல் அளவு விகிதாச்சாரங்கள் மிகச்சரியாக இருந்ததாம். நன்கு வளர்ந்த ஒரு மனிதனை அப்படியே சின்னதாக்கினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்ததாம் ! (miniature of a man) பின் அந்த உடலை ஆய்வுக்கு  ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அது குழந்தையின் உடல் அல்ல. 60 வயது நிறைந்த ஆணின் உடல் என்று தெரிந்தது.

விஷயம் பரவ, ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஆராய்ந்தவர்கள் இரு பிரிவாக பிரிந்தனர், ஒரு தரப்பு இதை பொய் என்றும், மற்றொரு தரப்பு உண்மை என்றும் தகவல் பரப்பினர் !

பொய் என்று சொன்னவர்களின் வாதம் இப்படியாக இருந்தது, "அது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருந்திருக்க கூடும், அது இறந்த உடன் அதை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்" என்று.

உண்மை என்றவர்கள், வேறுமாதிரி சொல்கிறார்கள் இவர்கள் “நிமேரிகர் மனிதர்கள்” என! ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அந்த பகுதியில் உள்ள பூர்வ குடிகளிடம் விவரம் சொல்லி கேட்டபோது அவர்கள் பகிர்ந்துகொண்ட சில தகவல்கள் திடுக்கிடும் ரகம்!  ஆதிவாசிகள் இவர்களை இவர்களை குட்டி மனிதர்கள் (Tiny Man) என்று அழைப்பார்களாம்.

மிக வேகமாகவும், மூர்க்கத்துடனும் வேட்டையாடுவது இவர்கள் இயல்பாம், எங்கிருக்கிறார்கள், எங்கிருந்து வருவார்கள் என்றே தெரியாமல் குட்டியாக இருப்பது இவர்களின் ப்ளஸ்! விஷம் தடவிய அம்புகளை எதிரிகள் மீது ஏவி அவர்களை கொல்வது இவர்களுடைய ஆகப்பெரும் திறமை என்கிறார்கள்.

அடர்ந்த காடுகளில் மட்டும் வசித்துவந்த இவர்களுக்கும், வளர்ச்சியடைந்த நம்மை போன்ற மனிதர்களுக்கும் இடையில் நிறைய சண்டைகள் நடந்ததாகவும், சண்டையில்  அவர்களை முற்றிலுமாக கொன்றொழித்தது நம்மை போன்ற நாகரிக மனிதர்கள்தான் என்றும் அந்த ஆதிவாசிகள் கூறினர்.

மேலும் அவர்கள் கூறுகையில் " நிமேரிகர்கள் தங்கள் குழுவில் உள்ள வயதானவர்களை, 'இனி அவர் வேட்டைக்கு பயன்பட மாட்டார்' எனும் நிலை வந்தால், அவர்கள் கொல்லும் விதம் எப்படி தெரியுமா? அதை ஒரு விழாவாக கொண்டாடி கொல்வார்களாம்! அது ஒரு கொலை விழா.. சாகப்போகும் வயதானவரும் கூட்டத்தினர் நடுவே ஆடிப்பாடி விழாவின் இறுதியில் நடுமண்டையை பிளந்து அவரை சாகடிப்பார்களாம்... அதாவது மண்டைக்குள் இருக்கும் பேயை வெளியேற்றுவது...

இந்த கூற்றை நியாயமாக்கும் விதமாக, கண்டெடுக்கப்பட்ட உடலில் தலை கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. ஆச்சர்யம் என்னவென்றால்? உடல் கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் தெரியாமலேயே அந்த ஆதிவாசிகள் சொன்னதுதான் மேற்கண்ட தகவல்!

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து டாக்டர் ஹென்றி ஷபீரோ (Dr. Henry Shapiro) என்கிற உயிரியல் ஆராய்ச்சியாளர், இது பொய்யோ போலியோ கிடையாது, இது குழந்தையின் உடல் அல்ல! முழு வளர்ச்சி அடைந்த 65 வயது ஆணின் உடல் என்றார். இதிலும் சின்ன முரண்பாடு இருந்தது, நிமேரியன் மனிதர்கள் 20 அங்குலத்தில் இருந்து 3.5 அடிகள் வரை வளரக்கூடியவர்கள்! கண்டுபிடிக்கப்பட்ட 65 வயது ஆணின் உடலின் வளர்ச்சி 14 அங்குலங்கள்தான்!! அதனால் அவர் நிமேரிகர் மனிதனாக இருக்க முடியாது என்கிற வாதம் வலுத்தது.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து வந்த டாக்டர் ஜார்ஜ் கில் என்பவர், மீண்டும் அந்த உடலை பரிசோதனைக்கு உட்படுத்தி "அது நிச்சயம் முழு வளர்ச்சியடையாத குழந்தையின் உடல்தான்" இதில் மர்மங்கள் எதுவும் இல்லை! அதேபோல, யாரும் அந்த உடலை பதப்படுத்தவில்லை, இந்தப்பகுதியில் நிலவும் வறண்ட பருவநிலை காரணமாக இந்த உடலில் உள்ள திசுக்கள் கெட்டுப்போகாமல் உடலை பாதுகாத்திருக்கிறது." என்றார்.

மர்மங்கள் எப்போதும் கண்ணாமூச்சி காட்டுபவைகள்தானே! டாக்டர் கில் சொன்னதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்ளும் சமயத்தில், அதே போல இன்னொரு உடல், ஒரு விவாசய குடும்பத்தின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இம்முறை கிடைத்தது ஒரு பெண் உடல்! கிடைத்த இடம் அதே வியோமிங் மலைப்பகுதிக்கு சற்று அருகாமையில். திரும்ப டாக்டர் கில் அழைக்கப்பட்டார், இம்முறையும், அவர் அதே வாதத்தைதான் வைத்தார் இதுவும் குழந்தைதான். குறை பிரசவத்தில் பிறந்திருக்ககூடும் என்றார், மற்ற சிலர் நம்பாமல் எதிர்வாதத்தை வைத்தார்கள். ஆனால் வயதையோ, அது வாழ்ந்த காலகட்டத்தையோ முழு பரிசோதனைக்கு உட்படுத்த விடாமல் அந்த பிணத்தை அந்த நிலத்தின் உரிமையாளர் பிடுங்கிக்கொண்டார். திரும்ப தரவே இல்ல.. இன்றுவரை !

இது சம்மந்தமாக பத்திரிக்கையில் வந்த செய்தி ! 

இதற்கிடையே சில வருடங்களில், சில  குட்டி மண்டையோடுகளும், எலும்புகூடுகளும் அதே ஏரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, “குட்டி மனிதர்கள் “ மேட்டர் மீண்டும் பரபரப்பானது! கண்டுபடிக்கப்பட்ட எல்லாமே 14 அங்குலம் அளவில்! திரும்பவும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. முன்பு கண்டெடுக்கப்பட்ட உடல்களை மீண்டும் ஆராய வேண்டும் என முற்பட்டபோதுதான் தெரிந்தது, தோண்டி எடுக்கப்பட்ட இரண்டு பிணங்களும் காணாமல் போனது !

முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உடலை, அங்குள்ள ஒரு பணக்காரர் வாங்கி தன் கடையில் பார்வைக்காக வைத்திருந்தார். அதன் பின் அவரிடமிருந்து "இவான் குட்மேன்" என்பவர் அந்த உடலை ஒரு பெருந்தொகைக்கு வாங்கினார். அவருக்கு பின் நியுயார்க்கில் உள்ள ஒரு பெரிய பிசினஸ்மேனிடம் கைமாறியது. அதை பார்வையாளர்களுக்கோ ஆராய்ச்சியாளர்களுக்கோ காட்டாமல் வைத்திருந்த அவர் 1980 ல் இறந்தார். அவரோடு சேர்ந்து அந்த உடல் எங்குள்ளது என்கிற மர்மமும் இறந்துபோனது.

தற்போது கூட அந்த தொலைந்த உடலை தேடி ஒரு குரூப் அலைந்துக்கொண்டிருக்கிறது! தகவல் தருபவர்களுக்கு 10,000 டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு உடல்களும் எங்கு போனது என்பது மட்டும் இன்றும் மர்மமாகவே நீடிக்கிறது ! 10,000 டாலர்கள் பரிசாம், முயற்சித்து பாருங்களேன்!

இதை சார்ந்த மூட நம்பிக்கைகளும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளும் :

  1. நிமேரிகள் மனிதர்கள் இன்னமும் ஆள் நடமாட்டம் இல்லாத காடுகளில் குகைகளில் வாழ்வதாகவும், அந்த பகுதியில் வழி தவறி வரும் நாகரிக மனிதர்களை அடித்து தின்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது
  1. நிமேரிகர் மனிதர்கள் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், அவர்கள் சில நாகரிக மனிதர்களுக்கு வைத்தியம் பார்த்து தீராத நோய்கள் சிலவற்றை தீர்த்து வைத்துள்ளார்ககளாம்!
  1. தற்போது அவர்கள் மிக உயரமாக, கிட்டத்தட்ட நம் அளவுக்கு வளர்ந்து மிக மிக கொடூரமான கொலைகாரர்களாக அலைகிறார்கள் என்றும், நரமாமிசத்துக்காக அவ்வப்போது ஊருக்குள் வந்து ஆட்களை கடத்திச்செல்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள் ! 
  1. நிமேநிகர் உடலை தேடி செல்பவர்களுக்கு துர்சம்பவங்கள் நடப்பதாகவும், அவர்கள் விரைவில் இறந்து போவதாகவும் ஒரு செவிவழி செய்தி உண்டு. இதன் காரணமாகவே அந்த மலைப்பகுதிக்கு யாரும் செல்வதில்லை என்கிறார்கள்.

எதற்கும் சரியான அதாரம் இல்லை. கண்டுபிடிக்கப்பட்டு காணாமல் போன மம்மி கிடைத்தால் இதைப்பற்றிய உண்மைகள் வெளிப்படலாம் 

அதுவரை இதெல்லாம் மர்மங்கள்தான் !