எல் நினோ

பெருமழைக்கும், மழையால் ஏற்படும் பேரழிவிற்கு பின்னும் இந்த பெயரை நாம் கேள்விப்பட்டிருப்போம், அது “எல் நினோ” சரியான உச்சரிப்பு “எல் நீனியோ” இயற்கை பேரிடர்களின்போதெல்லாம், “என்ன செய்ய..? எல்லாம் என் நினோவின் கைங்கர்யம்” என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான்.

நம்மை போன்ற சாமானியர்களுக்கு அது என்ன என்றே புரியாது. ஏதோ மேலடுக்கு சுழற்சியாம்! தண்ணி சூடாகுதாம்! அது ஏதோ ஒரு புயலாம்! என்கிற ரேஞ்சில் சரியான புரிதல் இல்லாமல் அதை கடந்துவிடுவோம். இனி அதற்கு அவசியமில்லை. இந்த கட்டுரை, “எல் நினோ” என்றால் என்ன என்பதை முழுமையாக உங்களுக்கு புரிய வைக்கும்.

“எல் நினோ”வை பார்க்கும் முன், மழை எப்படி வருகிறது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் “எல் நீனோ” விளைவை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும்.

“மழை எப்படி உருவாகிறது?”

  

சூரியனின் வெப்பத்தால், நீர் கொதித்து, அது ஆவியாகி காற்றின் அடர்த்தி குறைவாக உள்ள பகுதியில், கண்ணுக்கு தெரியாத குட்டிக்குட்டி நீர்த்திவளைகள் ஒன்றாகி மேகமாக சேர்கிறது, அப்படி சேர்ந்த மேகத்தின் மீது குளிர்காற்று வீசும்போது, அந்த மேகம் உதிர்ந்து மழையாக பொழிகிறது. 

எப்படி? சின்ன உதாரணம் மூலமாக சொல்கிறேன். நம் வீட்டில் தண்ணீரை கொதிக்க வைக்கும்போது கவனித்ததுண்டா? நீர் ஆவியாகாமல் இருக்க ஒரு தட்டம் கொண்டு மூடி வைப்போம் அல்லவா? அப்படி மூடிவைத்த தட்டத்தை விலக்கினால் என்ன நடக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? ஆவியாகி வெளியேற முடியாத நீர்த்திவளைகள், மூடி வைத்திருக்கும் தட்டத்தின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும். அதேதான் மேகமும்...!

சரி, இப்போது பாத்திரத்தில் இருந்து தட்டை வெளியே எடுக்கிறோம். என்ன நடக்கிறது? வெளிப்புற குளிர்காற்று பட்ட உடன் அந்த மூடியில் ஒட்டியிருக்கும் நீர்த்திவளைகள் கீழே விழுகிறது அல்லவா? இதுதான் மேகம், மற்றும் மழை! எளிதாக புரிந்துக்கொள்ள இதை கூறியுள்ளேன்..

இனி இதே ப்ராசஸ் இயற்கையின் உதவியுடன் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்...

கடலில் உள்ள ஆழங்களை மூன்று அடுக்குகளாக பிரிக்கிறார்கள், முறையே, Warm, Thermocline, Cold என, இதில் முதலில் வரும் வார்ம் என்பது கடலின் மேற்பரப்பில் சூரியனின் உதவியோடு சூடாகிக்கொண்டிருக்கும் நீர். அடுத்து, தெர்மோக்ளைன் எனப்படும் நடுவில் உள்ள பகுதி. மூன்றாவதாக கோல்ட் எனப்படும் குளிர்ச்சியான பகுதி.

பசிபிக் பெருங்கடலில், ஒரு நிலையான காற்று சுழற்சி ஏற்படும். அதற்கு பெயர் “ட்ரேட் விண்ட்ஸ்” என்பார்கள். அது வழக்கமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும். அப்படி வீசும்போது. அக்காற்று, கடலின் மேற்பரப்பில் உள்ள சூடான தண்ணீரை மேற்கு நோக்கி தள்ள ஆரம்பிக்கும், அப்படி தள்ளப்படும் சூடான நீர், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கரை பகுதிகளில் ஒன்றாக சேரும்.

ட்ரேட் விண்ட்ஸ் 

சூரிய வெப்பத்தால் இயல்பாகவே வெப்பமான நீர் இருக்கும் மேற்கு பகுதிக்கு, கிழக்கில் இருக்கும் கடலின் மேற்புற வெப்ப நீரை நம்ம “ட்ரேட் விண்ட்ஸ்” தள்ளிக்கொண்டே வந்து சேர்க்கும்போது, மேற்கு கடற்கரையில் உள்ள கடலின் நீர்மட்டம் மேலும் சூடாகும் அல்லவா?, அப்படியாக நீரின் சூடு அதிகரித்து, கடலின் ஆழம் வரை வெப்ப நீர் நிறையும், அந்த வெப்ப நீர் ஆவியாகி, மேகங்களாக உருவெடுக்கும். நம் வீட்டில் தண்ணீரை மூடிவைத்த தட்டில் ஒட்டியிருக்கும் நீர்த்திவளைகள் போல!

இப்படியாக உருவான மழை மேகங்களை, “Westerly Winds” எனப்படும் கிழக்கு நோக்கி வீசும் காற்று குளிர்வித்து மழையாக பொழிய வைக்கிறது.   

இன்னொருபுறம், மேற்கில் வெப்ப நீர் அதிகமாக அதிகமாக, கடலடியில் உள்ள குளிர்ந்த நீர் கிழக்கு நோக்கி தள்ளப்படும், இந்த நிகழ்வுக்கு “அப்வெல்லிங்!”(Upwelling) என்று பெயர். அதாவது கிழக்கில் குளிர்ந்துகொண்டே போகும், மேற்கில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும், இது ஒரு தொடர்நிகழ்வு. இதன் விளைவாகத்தான் பருவநிலைகள் மாறி மழை பொழிகிறது.

புரிகிறதா? இன்னும் விவரமாக புரிய, மீண்டும் வீட்டுக்குள் ஓடுவோம். வீட்டில் கொதிக்க வைக்கும் தண்ணீரருக்கு அடுப்பு தேவை, இங்கு, அதற்கு பதிலாக சூரியன், கொதிக்கும் தண்ணீர் பாத்திரம் மீது மூடிவைத்த தட்டுதான் மேகங்கள்.

நம் வீட்டில், கொதிநீருக்கு மேல் மூடிவைத்துள்ள தட்டை கையில் எடுக்கும்போது உள்ளிருக்கும் வெப்பத்தை விட குளிர்ந்த வெப்பநிலை நிலவுவதால் அந்த குளிர்காற்று பட்டு நீர்த்திவளைகள் கீழே கொட்டுகிறது, பசிபிக் கடலில் மேகத்தட்டுகளை “ வெஸ்டர்லி விண்ட்ஸ்” குளிர வைக்கிறது. அவ்வளவுதான். இப்படியாக, ஒருபுறம் கடல் நீர் சூடாகவும், இன்னொருபுறம் குளிர்ச்சியாகவும் ஆகிக்கொண்டே போகும் இந்நிகழ்வை “அட்மாஸ்பியர் சர்குலேஷன்” என்பார்கள்.

இது வழக்கமான நிகழ்வு.

சரி, இனி நாம் எல் நீனோவை கவனிப்போம்.

வழக்கமான பெய்யும் பருவமழை பொய்ப்பதற்கும், மழையே இல்லாத சமயத்தில் ஊரெங்கும் மழை கொட்டுவதற்கும் காரணம் இந்த “எல் நினோ” மகராசிதான்.

மீண்டும் பசிபிக் கடலுக்கு வருவோம். இம்முறை ட்ரேட் விண்ட்ஸ் எனப்படும் காற்று, சற்று வலுவிழந்துவிடுகிறது. ஆசியா வரை கடலின் மேற்பரப்பில் உள்ள கொதிநீரை தள்ள முடியாமல் போக, ஆசியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் ஆப்பிரிக்கா அருகில் மொத்த உஷ்ணமான நீரையும் சேர்க்கிறது. இதற்கு “வீக் ட்ரேட் விண்ட்ஸ்” என்று பெயரிட்டுள்ளார்கள்.

வழக்கமான ட்ரேட் விண்ட்சை கணிக்கும் அளவுக்கு வீக் ட்ரேட் விண்ட்சை கணிக்க முடியாது. என்பது உப தகவல்!

எல் நினோவை விளக்கும் படம் 

வீக்கான “ட்ரேட் விண்ட்ஸ்” மீண்டும் மீண்டும் நடுவிலேயே கொதிநீரை கொண்டுவந்து சேர்க்க, எல்லைகள் எதுவும் இன்றி, நடுக்கடலில் உள்ள கடல்நீர் வெப்பமாகிறது. இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் "வெஸ்டர்லி விண்ட்ஸ்" எனப்படும் காற்று, மேற்கில் உள்ள தண்ணீரை கிழக்கு நோக்கி தள்ளுகிறது. டிரேட் விண்ட்ஸ் ஒருபுறமும், வேஸ்டர்லி விண்ட்ஸ் மறுபுறமும் சேர்ந்து கடல்நேரை தள்ள, நடுவில் வந்து சேர்ந்து ஒரு பெரிய ஏரியா முழுக்க உஷ்ண நீர் சூழ்கிறது. முன்பு ஆசியக்கரையோரம் உள்ள கடல் நீர் வெப்பமானதால் ஏற்பட்ட "அப்வெல்லிங் எபெக்ட் அதற்கு எதிர்திசையில் உள்ள நீரை குளிர வைத்தது. இப்போது நடுவே உள்ள நீர் வெப்பமானால் என்னவாகும்? இதே அப்வெல்லிங், கடலின் இரண்டுபுறமும் நிகழும். அப்படி நடக்கும்போது, இரண்டு புறம் குளிர்ந்த நீரும், இடைப்பட்ட கடல் பகுதியில் உஷ்ண நீரும் சேர்கிறது. (மேலுள்ள படத்தை பார்க்கவும்)

இதன் விளைவாக மழை மேகங்கள் வெவ்வேறு திசையில் போக, வழக்கமாக மழையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை ஏமாற்றிவிட்டு, மழை என்றால் என்னவென்று தெரியாத பாலைவனங்களில் எல்லாம் மழை கொட்டித்தீர்க்கிறது. அல்லது, எதிர்பார்த்ததை விட அதிகமாக எதிர்பாராத நேரத்தில் மழைபெய்து, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களையும், லட்சக்கணக்கான ஏக்கர்கள் பயிர்களையும் உருத்தெரியாமல் அழித்துவிடுகிறது.

எல் நினோ விளைவுகளை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டுவிட முடியாது. அது செய்யும் நாசவேலைகள் ஆயிரம் அணுகுண்டுகளுக்கு சமம் என்கிறார்கள். சராசரியாக 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த எல் நினோ தோன்றுவதாக சொல்கிறார்கள். பெரும்பாலான மழை கடலில் கொட்டித்தீர்த்துவிடுவதால் இதைவிட பெரிய ஆபத்தில் சிக்காமல் தப்பிக்கொண்டிருக்கிறோம்.

எல் நீனோ எப்படி ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுப்டித்துவிட்டனர். ஆனால் ஏன் உருவாகிறது என்கிற கேள்விக்குதான் இதுவரை தெளிவான பதில் இல்லை.

  

எல் நீனோ பற்றி இன்னொரு சுவாரசியமான விஷயம் சொலவா? இதற்கு “எல் நீனோ (அ) எல் நீனியோ” என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?

கிபி 600 களில், கிறிஸ்துமஸ் சமயம், பெருவை சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிக்க சென்ற சமயத்தில், தங்கள் ஊரில் உள்ள கடல் நீர் சூடாக இருப்பதை எதேச்சையாக கண்டுபிடித்தனர். கிருஸ்துமஸ் நேரத்தில் மட்டும் அந்த இடம் சூடாவதை கண்டவர்கள். அது ஏதோ இயசுவின் திருவிளையாடல் என்று நினைத்து, பெரு மொழியில் ‘கிறிஸ்துவின் குழந்தை' என்று பெயரிட்டனர்..

அதாங்க.. பெரு மொழியில் எல் நீனியோ...!