Zombies உண்மையா? பாகம் – 2
சென்ற Zombies பாகம் - 1 ல் ஹைட்டியில் உள்ள உண்மையான zombies பற்றி பார்த்தோம் அல்லவா? அவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு உயிர் கொடுக்கும் மருந்து ஏது? அறிவியல்பூர்வமாக அதற்கு ஆதாரம் உண்டா?
தேடுவோம்..
அதற்கு முன், ஹைட்டியின் வரலாற்றை சற்று அலசுவோம். அதை தெரிந்துக்கொண்டால், மற்றவைகளை புரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும். கி.பி 1600 களில், ஆங்கிலேயர்களின் நாடுபிடிக்கும் வேட்டையில் ஹைட்டியும் சிக்கியது, வளங்கள் நிறைந்த அழகான நிலப்பரப்பு. விடுவார்களா வெள்ளையர்கள்! புகுந்து விளையாடினார்கள்.

வெள்ளையர்களின் அட்டூழியம் (மாதிரிப்படம்)
ஆப்பிரிக்காவில் இருந்து கறுப்பின மக்களை தூக்கிவந்து, ஹைட்டியில் தங்களுக்கு கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு, நாளொன்றுக்கு ஒருவேளை சாப்பாடு மட்டும் கொடுத்து, ஐந்து பேர்கள் கூடி செய்ய வேண்டிய வேலையை ஒரு அடிமையை செய்ய வைத்தார்கள். முரண்டுபிடிக்கும் அடிமைகள் குடும்பத்தோடு கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட 200 ஆண்டுகள். இந்த கொடூர சித்திரவதையில் உழன்றுகொண்டிருந்த கறுப்பினத்தவர். ஒரு கட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். போராட்டம் என்றால் நம்ம காந்தி மாதிரி அஹிம்சை கிடையாது. வெள்ளையர்கள் பாணியிலேயே கொலைவெறி தாக்குதல் நடத்தினர். வெள்ளையர்கள் பலபேர் கொல்லப்பட, போராட்டத்தின் முடிவில் (கி.பி 1800) ஹைட்டி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

கறுப்பர்களின் சுதந்திர போராட்டம்
அங்கிருந்து வெளியேறிய வெள்ளையர்கள். ஹைட்டி மக்கள் மனிதனை கொன்று உண்பவர்கள் என்று ஒரு விஷயத்தை போகிற போக்கில் கசியவிட... அது காட்டுத்தீ போல பரவியது. நிறைய கற்பனைக்கதைகள் புனையப்பட்டது.
இப்படியே வெளி உலகத்தின் கண்களுக்கு தெரியாமல், வேறெந்த கலாச்சார கலப்புமின்றி, ஹைட்டி அமைதியாக இருந்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகள். அதன்பிறகு ஹைட்டியில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் குழப்பத்தால், உலக முதலாளியான அமெரிக்கா, தன் “அமைதிப்படையை ( Peace keeping force) அனுப்பியது. அமைதிப்படை என்ன செய்யும்ன்னு நமக்கு தெரியாதா என்ன?
அது மேட்டர் அல்ல...

ஹைட்டியில் வந்திறங்கிய அமெரிக்க அமைதிப்படை
அங்கு வந்திருந்த அமெரிக்க ராணுவத்தினர், அங்குள்ள கரும்பாலைகளில் வேலை செய்துக்கொண்டிருந்த இயந்திரத்தனமான அடிமைகளை பார்த்து, அவர்களை பற்றி விசாரிக்க... “அவர்கள் எல்லாம் இறந்து போனவர்கள்... எங்கள் வூடு சூநியக்காரர்களால் உயிர்ப்பிக்கப்பட்ட அடிமைகள்.. அதாவது சாம்பீஸ்” என்று பதில் வந்தது. இதைக்கண்ட அமெரிக்க படையினர், இதை கருவாக வைத்துக்கொண்டு, பிற செவிவழி செய்திகளையும் சேர்த்து குழப்பியடித்து ஏகப்பட்ட புத்தகம் எழுதினார்கள்.
அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல கண்டென்ட் சேர்த்துக்கொள்ள, சாம்பிகள் என்பது உயிருள்ள மனிதனை கொன்று உண்ணும் இறந்த மனிதர்கள் என்றெல்லாம் கிளப்பிவிட, ஏற்கனவே 1800 களில் நரமாமிசம் உண்ணும் கூட்டம் என்று வெள்ளையர்களால் அடையாளப்படுத்தப்பட்டதையும் ஆதாரமாக்கி, ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

சினிமா சாம்பி
ஹைட்டியில் உள்ள அப்பாவி சாம்பிகளை ஹாலிவுட் படக்கதை சாம்பிகளாக மாற்றி, அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல கதைகள் புனைந்தவர்கள் அமெரிக்கர்கள்தான். இதன் பிறகுதான் டாக்டர் வேட் டேவிஸ் “ஹைட்டியில் என்னதான் நடக்குது பார்ப்போம்” என்று கிளம்பினார்
சரிப்பா.. அப்புறம் சாம்பிஸ்னா என்ன.. அது என்னதான் பண்ணுச்சி? உண்மை என்ன?
இதோ வரேன்..
முதன்முதலில் வெளிநாட்டில் இருந்து சென்று இதை தேடியலைந்து அலசி, பிழிந்து, காயப்போட்டவர் நம் Wade Davis தான். அவருக்கு பிறகு, சாம்பிகளை கண்டுபிடிக்கிறேன், அதன் மர்மங்களை உலகுக்கு காட்டுகிறேன் என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டு ஹைட்டிக்கு சென்றவர்கள் வெறும் கையோடுதான் திரும்பி வந்தார்கள்.
Dr. Wade Davis
ஆக, இன்றுவரை வேட் டேவிஸ் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுதான் அறிவியாளர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதைதான் புதிதாக வருபவர்களும் படிக்கிறார்கள்.
ஒகே... மீண்டும் ஹைட்டிக்கு வருவோம்..
இப்போது நாம் 1980 ல் இருக்கிறோம். இப்போது நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகப்படுத்தப்போகிறேன். அவர் பெயர் “Clairvius Narcisse!” யாரவர்?
1980 ஆம் வருடம், மாலைவேளை ஹைட்டியில் உள்ள “எல் எஸ்டேட்” எனும் கிராமத்தில் பதட்டம் தொற்றிக்கொள்கிறது. ஊர்மக்கள் கூடிக்கூடி பேசிக்கொள்கிறார்கள். “18 வருடங்களுக்கு முன் இறந்து போனவர் உயிரோடு வந்திருக்கிறார்” என்கிற செய்தி ஊருக்குள் தீயாய் பரவ.. ஊர்மக்கள் பயத்தோடும் பதட்டத்தோடும் அங்குள்ள மார்க்கெட் பகுதியில் ஒன்று கூடுகின்றனர்.
அங்கு, 18 வருடங்களுக்கு முன் இறந்துபோன நார்சீஸ் அமைதியாக நிற்கிறார். நான்கு புறங்களில் இருந்தும் கேள்விகள் அவரை துளைக்கிறது.
“நீ யார்”
“நான் நார்சீஸ்”
“நீ இறந்து 18 வருடங்கள் ஆகிவிட்டதே!”
“ஆமாம்”
“பிறகெப்படி உயிருடன் வந்தாய்?”
“வூடுக்கள் என்னை சாம்பியாக்கிவிட்டார்கள், சாம்பியாக்கி வேலை வாங்கினார்கள், நாசகாரியத்துக்கு என்னை உபயோகப்படுத்தினார்கள்” என்றார். ஹைட்டி மக்களுக்கு இது பெரிய விஷயமில்லை. சாம்பியாக்குவது அவர்கள் கலாச்சாரத்தில் ஒரு பகுதி. தொடர்ந்த உரையாடலின் முடிவில் நார்சீஸ்சுடைய தங்கை அழைத்துவரப்படுகிறார். (நார்சீசுடைய தங்கை அவர் மீது உயிரையே வைத்திருந்தாள் என்பது உப செய்தி)

நார்சீஸ் தன் சொந்த கல்லறை மீது !
நார்சீசின் தங்கை ஏஞ்சலினா தன் அண்ணன் என்றழைக்கப்பட்ட மனிதரை பார்த்த்து குழம்பிப்போய் நிற்க, நார்சீஸ் தழுதழுக்கும் குரலோடு, தன சின்னவயது செல்லப்பெயரை அவளிடம் சொன்னார். “குழப்பமும் ஆச்சரியமும் ஒன்றுசேர..! ஏஞ்சலினா தன் அண்ணனை ஆரத்தழுவிக்கொண்டாள்.
இதோ.. இங்கிருந்து நார்சீசின் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது.
ஹைட்டியில் உள்ள சமய நம்பிக்கைகளின்படி, சாம்பியாக்கப்பட்டவர், உயிரோடு வருவது மிக மிக அரிது, ஏனெனில், சாம்பியாக்கப்பட்டவர்களை அந்த சூனியக்காரர்களே கொன்றுவிடுவார்கள். அல்லது, ஊர்மக்கள் சேர்ந்து கொன்றுவிடுவார்கள். திரும்ப ஊருக்குள் சேர்த்துக்கொள்வதை அவர்கள் சமய நம்பிக்கை அனுமதிப்பதில்லை. (தற்போதைய நாகரிக உலகில், சாம்பியாக்குவது கிரிமினல் குற்றம் என்கிற சட்டம் ஹைட்டியில் நடைமுறையில் உள்ளது என்பது உபசெய்தி) விதிவிலக்காக நார்சீஸ்க்கு மட்டும் ஊருக்குள் செல்ல அனுமதி கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக நார்சீசுடைய நண்பர்கள் உற்றார் உறவினர்கள் எல்லோரும் இவர் நார்சீஸ்தான் என்று உறுதிசெய்தனர்.
இந்நிலையில் Dr. lamarque douyon என்பவருக்கு, நார்சீஸ் பற்றிய விவரம் கிடைத்தது. lamarque douyon கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சாம்பிக்களை பற்றி நிறைய ஆய்வுகளை மேற்கொண்டவர். அவர் நார்சீசையும் ஆராய்ந்தார். உயிர்பிழைத்து வந்தோம் எனச்சொல்பவர்களை கேட்பதற்காகவே ஏகப்பட்ட கேள்விகளை அவர் அனுபவத்தில் சேர்த்து வைத்திருந்தார்.

நார்சீஸ், அவர் தங்கை ஏஞ்சலினா மற்றும் டாக்டர் லாமார்க்
இது உண்மை அல்ல..! இவரை எப்படியாவது மடக்க வேண்டும்! என்கிற ஆர்வத்தில் பல கேள்விகளை கேட்ட Dr. lamarque douyon க்கு, அவர் அனுபவத்திலேயே அதிக அதிர்ச்சி நார்சீஸ்சிடம்தான் கிடைத்தது. ஆம்! கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக நார்சீஸ் பதிலளித்தார். இவர் உண்மையிலேயே இறப்பில் இருந்து மீண்டவர்தான் என Dr. lamarque douyon முடிவுசெய்தார். இது மருத்துவரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் அறிக்கை...!
நிற்க... ஆய்வாளர் வேட் டேவிஸ் வந்துக்கொண்டிருக்கிறார்... அவர் Dr. lamarque douyon உடன் சேர்ந்து நிறைய ஆய்வுகளை மேற்கொள்ளப்போகிறார். அவர் வருவதற்கு முன் நார்சீஸ் எப்படி இறந்தார் என்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம் வாருங்கள்.
ஆண்டு 1968!
நாற்பது வயதான நார்சீஸ், திடீரென ஒருநாள் கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறார். அடுத்த நாளே உடலெங்கும் கொப்புளங்கள் வர... தங்கை ஏஞ்சலினா, அண்ணனை ஆருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கிறார். இரண்டு நாட்கள்! அங்குள்ள அமெரிக்க டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தும், அவர்களால் நார்சீசை காப்பாற்ற முடியவில்லை. 1968 மே மாதம் 2 ஆம் தேதி, நார்சீஸ் இறந்து போனதாக அறிவிக்கிறார்கள்.
இரண்டு அமெரிக்க டாக்டர்கள் அவரை பரிசோதித்து, அவர் இறந்துவிட்டார் என்று இறப்பு சான்றிதழும் கொடுத்துவிட்டார்கள். அண்ணன் இறந்துவிட்டார் என ஏஞ்சலினாவுடைய ஒப்புதலையும் (Finger Print) டாக்டர்கள் பெற்றிருக்கிறார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. சில மருத்துவமனை செயல்முறைக்காக நார்சீசின் உடல் மார்ச்சுவரியில் கிடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் உறையவைக்கப்பட்ட உடல், அடுத்தநாள் உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நார்சீசின் சொந்த ஊரான, “எல் எஸ்டேட்” எனும் இடத்தில் உள்ள இடுகாட்டில் நார்சீசின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கதறியழுத அவர் தங்கையும் மற்றவர்களும் நார்சீசுக்கு விடைகொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
சரியாக பத்தாவது நாள், அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் கான்க்ரீட் சமாதி கட்டப்பட்டது. அதன்பிறகு 18 வருடம் கழித்துதான் நார்சீஸ் உயிரோடு வருகிறார்!
“உங்களால் நம்ப முடிகிறதா?” நீங்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.. அத்தனை ஆவணங்களும் பத்திரமாக உள்ளது. இன்றளவும் ஆய்வாளர்கள் நார்சீஸ் கேசை நான் கண்டுபிடிக்கிறேன் என்று ஹைட்டியில் உள்ள போலி மந்திரவாதிகள் பின்னால் அலைந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இத்தோடு நார்சீஸ் பிளாஸ்பேக்கை முடித்துக்கொள்வோம்..
இதோ வேட் டேவிஸ் வந்துவிட்டார்! சாம்பிகளை பற்றி ஆராய வந்தவருக்கு சாம்பிளாக செத்துப்போனவரே கிடைக்க! விடுவாரா நம்மாள்..? Dr. lamarque douyon அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் இருந்து பல தகவல்களை பெற்றவர். பின் அவரோடு சென்று நார்சீசையும் சந்தித்தார். அவர் பங்குக்கு அவரும் சில கேள்விகள் கேட்க.. நார்சீஸ் அவர் கல்லறை மீது அமர்ந்துக்கொண்டு கூலாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னாராம்.
முதலில் டேவிஸ், நார்சீசை நம்பவில்லை. Dr. lamarque douyon அறிக்கையிலும் அவருக்கு சந்தேகம் இருந்திருக்ககூடும். பின் அவர் இறப்பு சான்றிதழ், கைரேகை, நோய் குறித்து மருத்துவர்கள் கொடுத்த அறிக்கை, போன்றவைகளை இவர் ஒருமுறை ஆராய்ந்தார். அது டி என் ஏ டெஸ்ட் வரை நீண்டது. வேறு வழியே இல்லாமல் இறப்பிலிருந்து மீண்டு வந்தவர் நார்சீஸ்தான் என்பதை Dr. lamarque douyon உடன் சேர்ந்து டேவிசும் ஒப்புக்கொண்டார்.

வூடு மந்திரவாதி
இதைப்பற்றி நார்சீசுடன் Dr. lamarque douyon மற்றும் வேட் டேவிஸ் போன்றோர் பேசியது. அவரிடம் இவர் கேட்ட கேள்விகளும் அவர் பதில்களும் இன்றளவும் காணக்கிடைக்கிறது. அதை சுருக்கமாக இங்கு குறிப்பிடுகிறேன்.
நார்சீஸ் இறந்துபோன கணத்தில் இருந்து, அவரை அடக்கம் செய்தவரை எல்லாமே அவருக்கு தெரிந்ததாம்! மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தது முதல், அவர் தங்கை கதறியது, எல்லாவற்றையும் சொல்கிறார். வேட் டேவிஸ் பொறுமையாக எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொண்டார்.
மண்ணை போட்டு மூடிய பின்னும், தன் தங்கை அழுவது அவர் காதுகளில் கேட்டதாகவும், கை கால்களை அசைத்து எழுந்துச்சென்று அவளை ஆறுதல் படுத்த முடியவில்லை என்றும் சொல்கிறார். இதன் பிறகு அவர் சொன்னதுதான் மேட்டரே...
எல்லோரும் கலைந்து போன பிறகும், அவருக்கு நினைவிருந்ததாம். இனி நார்சீஸ் கண்களில் அவர் சொன்னதை பார்ப்போம்...
“உறவினர்கள் அனைவரும் கலைந்து போய்விட்டனர்... என் நிலையை நினைத்து மனதுக்குள் அழுகிறேன்... நேரம் கடக்கிறது. விறைத்துப்போய் கிடக்கிறேன். வெளியில் யாரோ பேசிக்கொண்டு இருப்பது மெலிதாக கேட்கிறது. நான் புதைக்கப்பட்டிருக்கும் குழி தோண்டப்படுகிறது.
மந்திரவாதிகள் சவப்பெட்டியை திறந்து என்னை வெளியே எடுக்கிறார்கள். எல்லாமே எனக்கு தெளிவாக தெரிகிறது. கண்களை அசைக்கமுடியவில்லை. கைகால்களை ஆட்ட முடியவில்லை..வெளியே எடுத்த மந்திரவாதிகள் என் கன்னத்தில் மூன்று முறை அறைகிறார்கள். பின் என் பெயரை சொல்லி அழைத்து, என் வாயில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றுகிறார்கள். நிறைய மந்திரம் சொல்கிறார்கள்... அட! அந்த திரவம் எனக்குள் இறங்க இறங்க.. எனக்கு உணர்வுகள் வருகிறது.

என் நுரையீரல்களில் காற்று நிரம்புகிறது... சுவாசிக்க முடிகிறது.. கை கால் விரல்களை அசைக்க முடிகிறது..! மெல்ல கண்களை சுழற்றுகிறேன்.. எல்லாமே தெளிவாக தெரிகிறது. ‘ அட! நான் மரணத்தில் இருந்து மீண்டுவிட்டேனா?’ என என்னை நானே கேள்வி கேட்கிறேன். உடல் வலியும் மன வேதனையும் சூழ... மெல்ல திரும்பிப்பார்க்கிறேன்.. என் உடலை எடுத்தவர்கள், வெறும் பெட்டியை மண்ணுக்குள் போட்டு மூடுகிறார்கள். இப்போது என்னால் எழ முடிகிறது” என்கிறார் நார்சீஸ்.
இவ்வளவுதான் நார்சீஸ்க்கு நினைவில் இருக்கிறது. பின் அவருக்கு சுயநினைவு திரும்பும்போது, ஏதோ ஒரு சர்க்கரை ஆலையில் தான் அடிமையாக இருப்பதை உணர்கிறார். தான் மட்டுமல்ல... தன்னைப்போல நூற்றுக்கணக்கான அடிமைகள் அங்கு தேமே என்று வேலை பார்க்கிறார்கள். நார்சீஸ் மீண்டும் நினைவிழக்கிறார்.
வூடு மந்திரவாதிகள், இப்படிதான் சாம்பீசை கட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கிறார்கள்! இவர்களுக்கு சுயநினைவு திரும்பும்போது, மீண்டும் அவர்கள் இவர்களை வசியப்படுத்திவிடுவார்கள். மைன்ட் கண்ட்ரோல் என அறிவியல் கூறும் விஷயத்தை மிகச்சாதாரணமாக செய்திருக்கிறார்கள் வூடு மந்திரவாதிகள்!

வூடுக்கள் பிடியில் ஒரு ஹைட்டி சாம்பி
இப்படி நினைவு திரும்பிய சாம்பிகள், தன்னை ஏவிய மந்திரவாதியை கொன்றுவிட்டு தப்பிய கதைகளும் உண்டு. இந்த வகையில், நார்சீசை வசியப்படுத்தி வைத்திருந்த வூடு மந்திரவாதி இறந்து போக, இவரோடு இருந்த அத்தனை சாம்பிகளுக்கும் சுய உணர்வு வந்து, சிலர் காட்டுக்குள்ளும், சிலர் அவரவர் கிராமத்துக்கும் போயிருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கும் நார்சீசுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், நார்சீசுக்கு நடந்தது அத்தனையும் தெரியும். மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது.
இத்தனை விஷயங்களையும் அறிந்துக்கொண்ட வேட் டேவிஸ், எப்படி இவரை சாம்பி ஆக்கினார்கள், இவரை எப்படி பிழைக்க வைத்தார்கள். அது என்ன? அந்த சாம்பி பவுடரில் உள்ள மூலப்பொருட்கள் என்ன? என்றெல்லாம் விடைதேடி ஆய்வில் இறங்கினார்.
அது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை... ஏகப்பட்ட அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும், மருத்துவத்துக்கும், அறிவியலுக்கும் சவால் விடும் சங்கதிகளும் காத்துக்கொண்டிருந்தது.
அடுத்த பகுதி : சாம்பி பவுடரின் மூலக்கூறுகள், எப்படி சாம்பி ஆக்குகிறார்கள் என்கிற முறை, மற்றும், “Francina Elias” எனும் பெண் சாம்பி பற்றிய விளக்கம்....
காத்திருங்கள்.....

Add a Comment
11 Comments
Romba different ah erruke
சாம்பிஸ்1நான் இன்னும் படிக்கவில்லை அது உங்கள் ஆப்ஸில் இல்லை படித்தபின் காமெண்ட் நான் இன்னும் சாம்பிஸ் 1படிக்க வில்லை படித்த பிறகு கருத்து சொல்கிறேன்.
அடுத்த பாகம் சீக்கிரம் பதிவிடுங்கள் தோழரே...! ரொம்பவே ஆர்வத்த் தூண்டி விட்டுட்டிங்க...!!
Ennala itha namma mudiyala... BT, padikka nalla iruku....
Dealt super.
Hey super PA
Your conversation is quite superb.Em waiting for the next chapter.
Good news Bro But you are not update quickly pls update weekly once and then gather many newses....
Amazing. Thanks for the information.
Super
Zombie part 3 எப்ப வரும். ஜோம்பிஸ் என்ன சாப்பிடும். எத்தனை வருஷம் உயிர் வாழும்?